பள்ளிபாளையத்தில் மொபட் மீது பஸ் மோதல்;தொழிலாளி பலி


பள்ளிபாளையத்தில் மொபட் மீது பஸ் மோதல்;தொழிலாளி பலி
x
தினத்தந்தி 5 Oct 2021 7:23 AM IST (Updated: 5 Oct 2021 7:37 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையத்தில் மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலியானார். அவருடைய நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆண்டிகாடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மகன் திருப்பதி (வயது 25). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இந்தநிலையில் திருப்பதி, மற்றும் அவருடைய நண்பரான சேகர் (45) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் திருச்செங்கோட்டில் இருந்து பள்ளிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். 

மொபட்டை திருப்பதி ஓட்டினார். சேகர் பின்னால் அமர்ந்திருந்தார்.
அப்போது பள்ளிபாளையம் யூனியன் அலுவலகம் செல்லும் சாலையில் வந்தபோது ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் வழியாக திருச்செங்கோடு சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த திருப்பதி உயிருக்கு போராடினார். சேகர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் உயிருக்கு போராடிய திருப்பதியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் திருப்பதி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் ஆண்டிகாடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story