குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா  இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 5 Oct 2021 5:04 PM IST (Updated: 5 Oct 2021 5:04 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில்
தசரா பெருந்திருவிழா இன்று(புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
தசரா திருவிழா
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு 8.30  மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று(புதன்கிழமை) காலை 9.30மணிக்கு கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் தசராதிருவிழா தொடங்குகிறது. இன்றைய நாள் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
பக்தர்களுக்கு அனுமதியில்லை
நாளை( வியாழன்) மட்டும் பக்தர்கள் அனு மதிக்கப்படுவார்கள். நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 6 ஆம் திருநாளான அக்.11ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து 10-ஆம் திருவிழாவான அக்.15-ஆம்் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷாசுரசம்காரம் கடற்கரைக்கு பதில் கோவில் முன்பு நடைபெறுகிறது. அன்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 11-ஆம் திரு நாளான அக்.16ம் தேதி முதல் 3 நாட்களுக்கும் தொடர்ந்த பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மொத்தம் 12 நாள் நடைபெறும் தசரா திருவிழாவில் 5 நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருக்கோலத்தில் காட்சி 
திருவிழா நாட்களில் இரவு 9 மணிக்கு பக்தர்கள் யாரும் இல்லாமல், முதல் நாள் திருவிழாவில் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2-ஆம்நாள் திருவிழாவில் கற்பக விருட்ச வாகனத்தில் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்திலும், 3-ஆம்திருநாள் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4-ஆம் திருநாள் மயில் வாகனத்தில் பாலசுப்ரமணியர் திருக்கோலத்திலும், 5-ஆம் திருநாளில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்திலும், 6-ஆம்் திருநாளில் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்திலும்், 7-ஆம்திருநாள் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ஆம்் திருநாள் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும்், 9-ஆம் திருநாள் அன்னவாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் திருக்கோவிலை சுற்றும் நிகழ்ச்சி நடைபெறும். 11-ஆம் திருநாள் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளல், 12-ஆம் திருநாள் நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிசேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.
மேளதாளம் கூடாது
தசரா திருவிழாவில் பக்தர்கள்தடை செய்யப்பட்ட 7 நாட்களும் பக்தர்கள் யாரும் கோவில் வளாகம் மற்றும் கோவில் சுற்றுப்புற பகுதியில் நடமாடக் கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடற்கரை மற்றும் கோவிலை சுற்றி எந்த விதமான கலை நிகழ்ச்சிகள் தற்காலிக சிறப்பு கடைகள் வைக்கக்கூடாது என்றும், சிறப்பு கலை நிகழ்ச்சி. மேளதாளங்களுடன் தசரா பக்தர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்றும்,  தேங்காய், பழம், பூ போன்ற அர்ச்சனைப் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்றும், பக்தர்கள் முககவசம் அணிந்து வருவதுடன், கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story