டாஸ்மாக் கடைகளை 4 மணி நேரம் அடைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விற்பனையாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை 4 மணி நேரம் அடைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:
டாஸ்மாக் விற்பனையாளர் கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்கள் துளசிதாஸ், ராமு ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு புறப்பட்ட போது அவர்களை மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியால் குத்தினர். இதில், துளசிதாஸ் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். ராமு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்து அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்க வலியுறுத்தியும் டாஸ்மாக் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் இந்த கொலை சம்பவத்தை கண்டித்து டாஸ்மாக் கடைகளை நேற்று 4 மணி நேரம் அடைத்து டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டிய கடை பகல் 2 மணிக்கு திறக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 93 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டம்
மேலும், இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் தேனி டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் அனைவரையும் கைது செய்து அவர்களுக்கு தூக்குத்தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
உயிரிழந்த துளசிதாஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் ராமுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story