மது விற்றதாக மேற்பார்வையாளர்கள் உள்பட 3 பேர் பணியிட மாற்றம்


மது விற்றதாக  மேற்பார்வையாளர்கள் உள்பட 3 பேர் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 5 Oct 2021 7:18 PM IST (Updated: 5 Oct 2021 7:18 PM IST)
t-max-icont-min-icon

மது விற்றதாக மேற்பார்வையாளர்கள் உள்பட 3 பேர் பணியிட மாற்றம்

கூடலூர்
கூடுதல் விலைக்கு மது விற்றதாக மேற்பார்வையாளர்கள் உள்பட 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்துள்ளதாக நீலகிரி மாவட்ட டாஸ்மாக் நிர்வாக அதிகாரி நடவடிக்கை எடுத்து உள்ளார். 


திடீர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக பல்வேறு புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் டாஸ்மாக் மேலாளர் சேகர் தலைமையிலான அதிகாரிகள் குன்னூர், கூடலூர் உள்பட பல இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது குன்னூரில் உள்ள டாஸ்மாக்கடை ஒன்றில் ஒரே வாடிக்கையாளரிடம் பலமுறை கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து துறை ரீதியாக விசாரணை நடைபெற்றது. அப்போது கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.

3 பேர் பணியிட மாற்றம்

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், காந்தி, விற்பனையாளர் ஆறுமுகம் ஆகிய 3 பேர் அப்பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்த பணியிட மாறுதல் அளிக்கப்பட்டு ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு மதுபானக் கழகத்துக்கு சொந்தமான குடோனில் பணி அமர்த்தப்பட்டனர். மேலும் கூடுதல் விலைக்கு மது விற்றதால் ரூ.11,800 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து டாஸ்மாக் மேலாளர் சேகர் கூறியதாவது:-

அபராதம்

மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என துறை ரீதியாக அனைத்து கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வரப்பெற்றது. இதுதொடர்பாக திடீர் ஆய்வு நடத்தியபோது குன்னூரில் உள்ள ஒரு கடையில் ஒரே வாடிக்கையாளரிடம் கூடுதலாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், காந்தி, விற்பனையாளர் ஆறுமுகம் ஆகியோருக்கு ரூ.11,800 அபராதம் விதிக்கப்பட்டு டாஸ்மாக் குடோனுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story