அண்ணன் மகளுக்கு கொலை மிரட்டல்:முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது
அண்ணன் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
பாலக்கோடு:
அண்ணன் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
கொலை மிரட்டல்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலை அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 52). இவர் அந்த கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்துள்ளார். இவருடைய மனைவி தற்போது இந்த ஊராட்சியின் தலைவராக உள்ளார்.
இந்த நிலையில் இளங்கோ தன்னுடைய அண்ணன் விஸ்வநாதனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அனுமதியின்றி தேங்காய் பறிக்க சென்றுள்ளார். இந்த நிலையில் விஸ்வநாதனின் மகள் நிஷா (26) தன்னுடைய சித்தப்பா இளங்கோவிடம் எங்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இனி தேங்காய் பறிக்கக்கூடாது என கூறி உள்ளார்.
அதனை மீறி இளங்கோ தேங்காய் பறித்துள்ளார். இதனை நிஷா தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த இளங்கோ, அண்ணன் மகள் என்றும், பாராமல் தனது வேட்டியை கழற்றி அரை நிர்வாணமாக நின்றபடி ஆபாசமாக பேசியும், அரிவாளுடன் மகளுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
கைது
இதனை வீடியோவாக பதிவு செய்த நிஷா, பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாலக்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் இளங்கோ ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து இளங்கோவை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் ஆபாச பேச்சு மற்றும் அண்ணன் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Related Tags :
Next Story