உடன்குடி அருகே இறந்து கிடந்த மிளாவால் பரபரப்பு


உடன்குடி அருகே இறந்து கிடந்த மிளாவால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Oct 2021 9:26 PM IST (Updated: 5 Oct 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அருகே இறந்து கிடந்த மிளாவால் பரபரப்பு நிலவியது

குலசேகரன்பட்டினம்:
உடன்குடி அருகே சாலையோரத்தில் மிளா இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் உடலை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனவிலங்குகள்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான நெல்லை மாவட்டம் களக்காடு, வள்ளியூர் பகுதிகளில் மிளா, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு நேரங்களில் மிளா, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வந்து சென்றன. இதில் சில விலங்குகள் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் சில வனவிலங்குகள் திரும்பி வனத்துக்குள் செல்ல முடியாமல் உணவு, தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகள், தோட்டங்கள், காடுகளில் சுற்றித் திரிந்து வந்தன. இந்நிலையில் பரமன்குறிச்சி யிலுள்ள ஒரு தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புள்ளிமான் பிடிபட்டது. இதுகுறித்து தகவல் தெரிந்ததும் வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு களக்காடு வனப்பகுதியில் விட்டனர். 
மிளா
கடந்த சில நாட்களாக திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் மிளா ஒன்று சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் பல்வேறு இடங்களில் தேடியும் அது சிக்கவில்லை.இச்சூழ்நிலையில் உடன்குடி அருகேயுள்ள ஜெ.ஜெ.நகரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் மிளா ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தாமோர், திருச்செந்தூர் வன அலுவலர் ரவீந்திரன், வனவர் அப்பணசாமி, வனக்காப்பாளர் அபிஷேக் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு இறந்த மிளா உடலைக் கைப்பற்றினர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரேத பரிசோதனைக்குப் பின் குதிரைமொழி தேரிப்பகுதியில் அதை அடக்கம் செய்தனர்.
வனத்துறையினர் விசாரணை
தற்போது வனத்துறையினர் காட்டுப்பகுதியில் யாரேனும் வேட்டையாடும் போது அவர்களிடமிருந்து தப்பி வந்த மிளா காரில் அடிபட்டு இருந்ததா? அல்லது வேட்டையாடுபவர்களால் தாக்கப்பட்டு இருந்ததா? அல்லது விஷம் வைத்து சாகடிக்கப்பட்டதா? என்ற ரீதியில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
சாலையோரம் மிளா இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story