வீட்டுவசதி வாரிய அலுவலகம் ஜப்தி


வீட்டுவசதி வாரிய அலுவலகம் ஜப்தி
x
தினத்தந்தி 5 Oct 2021 10:51 PM IST (Updated: 5 Oct 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் விழுப்புரம் வீட்டுவசதி வாரிய அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 66). இவருக்கு சொந்தமான அதே பகுதியில் இருந்த 16 ஏக்கர் நிலத்தை கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட கையகப்படுத்தியது.  இதற்காக அவருக்கு ஒரு சதுரடிக்கு ரூ.7.35 என்று நிர்ணயம் செய்து 1994-ல் ரூ.50 லட்சத்தை வீட்டுவசதி வாரியம் வழங்கியது.
இந்த தொகை போதாது என்றும், சதுரடிக்கு ரூ.100 ஆக உயர்த்தி வழங்கக்கோரி ஜெயபால், 1996-ல் விழுப்புரம் மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக 5 வழக்குகளை தொடர்ந்தார். 
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சதுரடிக்கு ரூ.25 என நிர்ணயம் செய்து வழங்குமாறு வீட்டுவசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து வீட்டுவசதி வாரியம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. அதில் நாங்கள் சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட மேம்பாட்டு வசதிகளை செய்து கொடுத்துள்ளோம் எனவே இந்த தொகையை குறைக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயபாலுக்கு சதுரடிக்கு ரூ.17 என நிர்ணயம் செய்து வழங்குமாறு வீட்டுவசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது.

மேல்முறையீட்டு மனுதாக்கல்

இந்த தொகையையும் வழங்காமல் வீட்டுவசதி வாரியம் காலம் தாழ்த்தி வந்ததால் அந்த தொகையை உடனடியாக வழங்கக்கோரி மனுதாரர் ஜெயபால் சார்பில் வக்கீல் தரணிவேந்தன் மீண்டும் 2019-ல் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதில் 5 வழக்குகளில் ஒரு வழக்கு (1 ஏக்கர் 1 சென்ட்க்கு இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு) மீதான விசாரணையின்போது வட்டியுடன் சேர்த்து ரூ.15 லட்சத்து 31 ஆயிரத்து 640-ஐ ஜெயபாலுக்கு வழங்கும்படியும், இந்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்காதபட்சத்தில் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தை ஜப்தி செய்யுமாறும் நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டார்.

வீட்டுவசதி வாரிய அலுவலகம் ஜப்தி 

இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின்னரும் மனுதாரர் ஜெயபாலுக்கு வழங்க வேண்டிய தொகையை வீட்டுவசதி வாரியம் வழங்கவில்லை. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்படி நேற்று முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் கலியமூர்த்தி மற்றும் ஊழியர்கள் விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த இரும்பு பீரோக்கள், நாற்காலிகள், மேஜைகள், கணினி, மின்விசிறிகள் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது வக்கீல் தரணிவேந்தன், மனுதாரர் ஜெயபால் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story