தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த செய்திகள் வருமாறு:-
மாணவர்கள் ஆபத்தான பயணம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூர் மாவட்ட இணைப்பு பாலமான வாய்மேடு மேற்கு பகுதி வளவனாறு பாலத்தின் முகப்பு பகுதி சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. நாள்தோறும் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், விவசாயிகள் சென்று வருகின்றனர். பாலத்தன் முகப்பு பகுதி சேதமடைந்துள்ளதால் தவறி ஆற்றுக்குள் விழும் அபாய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாலத்தின் முகப்பு பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வாய்மேடு பொதுமக்கள்.
சேதமடைந்த பள்ளி கட்டிடம்
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுகா, செருமங்கலம் ஊராட்சி, செரு உடையார் தெருவில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் கஜா புயலில் சேதமடைந்தது. கொரோனாவால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அடுத்த மாதம்(நவம்பர்) 1-ந்தேதியில் இருந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மாணவர்கள் பள்ளி வரும் போது சேதமடைந்த கட்டிடத்தால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிராம பொதுமக்கள் செருமங்கலம்.
மருத்துவமனை வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரையில் அரசு மருத்துவமனை பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. தற்போது மருத்துவமனை இடிக்கப்பட்டு தரைமட்டமாக உள்ளது. இந்த ஊரை சுற்றி உள்ள பல கிராம மக்கள் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் 9 கி.மீட்டர் தொலைவில் உள்ள மயிலாடுதுறைக்கு செல்ல வேண்ய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்பொதுமக்கள் நலன் கருதி வடகரையில் மருத்துவமனை கட்டிடம் புதிதாக கட்டி தர வேண்டும்.
-ஹா.ஜாஹிர் உசேன் ஜவஹர் தெரு வடகரை.
மரம் அகற்றப்படுமா?
மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில் கீழையூர் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சாய்ந்த நிலையில் மரம் பல மாதங்களாக உள்ளது. சாலையோரங்களில் மின்விளக்குகள் எதுவும் இல்லை. இதனால் இருள் சூழந்து காணப்படுகிறது. இருளில் மரம் சாய்ந்த இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த மரத்தை அகற்றி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள். கீழையூர் சத்திரம்.
நாய்கள் தொல்லை
மயிலாடுதுறை மாவட்டம், வள்ளலாகரம் ஊராட்சி, சிவப்பிரியா நகர் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் ஆடு, கோழிகளை தின்று விடுகின்றன. மேலும் பொது மக்களை விரட்டி விரட்டி நாய்கள் கடித்து அச்சுறுத்தி வருகின்றன. சாலையில் வாகனங்கள் செல்லும் போது நாய்கள் குறுக்கே ஓடுவதால் பெரும் விபத்துகள் நடக்கிறது.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நாய்களை பிடித்துஅப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், சிவப்பிரியா நகர்.
மினி பஸ் இயக்கப்படுமா?
நீடாமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. நாள்தோறும் ஏராளமான ஆண்களும், பெண்களும் பஸ் வசதியின்றி சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். எனவே வடுவூரில் இருந்து புள்ளவராயன்குடிக்காடு, கருப்பமுதலியார்கோட்டை, நத்தம், தேன்கனிக்கோட்டை, ஆதனூர், மண்டபம் வழியாக நீடாமங்கலம் வரை மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், வடுவூர்.
சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர்
மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி சிவன் கோவில் தெரு உள்ளது. இந்ததெருவில் உள்ள சாலை சேதமடைந்து மிகவும் மோசமாக உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் மழை நீர் தேங்காதவாறு சாலையை சீரமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், பட்டவர்த்தி சிவன் கோவில்தெரு.
Related Tags :
Next Story