வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக 84 இடங்களில் தீவிர கண்காணிப்பு


வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக 84 இடங்களில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 6 Oct 2021 1:35 AM IST (Updated: 6 Oct 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக மாவட்டம் முழுவதும் 84 இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று நீர்ப்பாசனத்துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம்சர்மா தெரிவித்தார்.

திண்டுக்கல்:
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக மாவட்டம் முழுவதும் 84 இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று நீர்ப்பாசனத்துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம்சர்மா தெரிவித்தார்.
84 இடங்கள் கண்காணிப்பு 
திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நீர்ப்பாசனத்துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம்சர்மா தலைமை தாங்கினார். கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தினேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் முதன்மை செயலாளர் மங்கத்ராம்சர்மா பேசியதாவது:- 
திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்காலத்தில் பாதிக்கப்படும் பகுதியாக 84 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அதில் 24 இடங்கள் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகள் ஆகும். எனவே அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். புயல், மழை வெள்ளத்தை தடுக்க ஒவ்வொரு துறையினரும் அவசர காலதிட்டம் தயாரித்து வைத்திருக்க வேண்டும். வருவாய், உள்ளாட்சித்துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
மருத்துவ உபகரணங்கள்
வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க ரப்பர் படகுகள், மிதவை படகுகளை தயாராக வைக்க வேண்டும். மீட்பு பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளித்து ஒத்திகை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர்காக்கும் மருந்துகளை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். மேலும் மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவக்குழு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான பால், குடிநீர், உணவு பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சி உரக்கிடங்கில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை முதன்மை செயலாளர் மங்கத்ராம்சர்மா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தரம் பிரித்து அகற்றுவது குறித்து கேட்டறிந்தார்.
 இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட வனஅலுவலர் பிரபு, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Next Story