அய்யனார் கோவிலில் நகை, வெள்ளி வேல் திருட்டு
தேவகோட்டை அய்யனார் கோவிலில் நகை, வெள்ளி வேல் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை
தேவகோட்டை அய்யனார் கோவிலில் நகை, வெள்ளி வேல் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அய்யனார் கோவில்
தேவகோட்டை அருகே உள்ள இரவுசேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆதினமிளகி அய்யனார் கோவில் உள்ளது. இந்தக் கோவில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில். இந்த கோவில் பாதுகாப்பு பணிக்கு 3 இரவுக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு காவலர்கள் பணிக்கு வரவில்லை. தேவகோட்டை நகர், இரவுசேரி மற்றும் சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு ஆதினமிளகி அய்யனார் காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.
இந்த கோவிலில் விஷேச நாட்களில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக் கணக்கான பொது மக்கள் சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று இரவு பூசாரி வழக்கம்போல் பூஜைகளை முடித்து கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பத்திரகாளி அம்மன் சன்னதி கதவின் பூட்டை உடைத்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலி, வெள்ளி வேல் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
விசாரணை
நேற்று காலை பூஜைகள் செய்ய பூசாரி கோவிலை திறந்தபோது அம்மன் சன்னதி கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை, வெள்ளி வேல் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story