கரும்புக்கு உரிய ஆதரவு விலை வழங்க கோரி பெங்களூருவில் விவசாயிகள் ஊர்வலம்


கரும்புக்கு உரிய ஆதரவு விலை வழங்க கோரி பெங்களூருவில் விவசாயிகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 5 Oct 2021 8:34 PM GMT (Updated: 5 Oct 2021 8:34 PM GMT)

கரும்புக்கு உரிய ஆதரவு விலை வழங்க கோரி விவசாயிகள் பெங்களூருவில் ஊர்வலம் நடத்தினர்.

பெங்களூரு:

விவசாயிகள் ஊர்வலம்

  உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் மீது தாக்குதலை கண்டித்தும், கரும்புக்கு உரிய ஆதரவு விலை வழங்க கோரியும் கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் தலைமையில் கரும்பு விவசாயிகள் ஊர்வலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய விவசாயிகளின் ஊர்வலம், சுதந்திர பூங்கா வரை நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து முழக்கமிட்டனர். இந்த ஊர்வலத்தின் முடிவில் குருபூர் சாந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
  கரும்பு சாகுபடி செலவு 2 மடங்கு அதிகரித்துவிட்டது. ஆனால் அதற்கான ஆதரவு விலையை கடந்த 2 ஆண்டுகளாக உயர்த்தவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது அரசு கரும்புக்கு டன்னுக்கு வெறும் ரூ.50 தான் உயர்த்தியுள்ளது. இது போதாது. கரும்பில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் மற்றும் பிற பொருட்களின் உற்பத்தியால் கிடைக்கும் லாபத்தில் விவசாயிகளுக்கும் பங்கு வழங்க வேண்டும்.

15 சதவீத வட்டி

  கரும்பை எடை போடுவதில் நடைபெறும் முறைகேடு, பணம் பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஆகியவற்றை தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதமாக வழங்கப்படும் பணத்திற்கு 15 சதவீத வட்டி வழங்க வேண்டும். புதிய சர்க்கரை ஆலைகளை தொடங்க 25 கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.

  விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்துள்ளனர்.

  இதை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய அரசு விவசாயிகளை கடுமையாக தாக்கி வருகிறது. இதன் மூலம் பா.ஜனதா ராவண ராஜ்ஜியத்தை உருவாக்க முயற்சி செய்கிறது.
  இவ்வாறு குருபூர் சாந்தகுமார் கூறினார்.

Next Story