இறைச்சிக்கடை உரிமையாளர் வெட்டிக்கொலை


இறைச்சிக்கடை உரிமையாளர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 6 Oct 2021 2:08 AM IST (Updated: 6 Oct 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி அருகே மது குடித்ததை தட்டிக்கேட்ட இறைச்சிக்கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி அருகே மது குடித்ததை தட்டிக்கேட்ட இறைச்சிக்கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 
மது குடித்ததை தட்டிக்கேட்டார்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அண்ணா சிலை அருகில் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தவர் செல்வம்(வயது 45). இவருடைய கடையில் இறைச்சி வெட்டும் மரக்கட்டையில் நேற்று மாலை மதுபாட்டில்களை வைத்து அதே பகுதியை சேர்ந்த 4 பேர் அமர்ந்து மது குடித்துக்கொண்டு இருந்தனர். 
அப்போது அங்கு வந்த செல்வம், தனது கடையில் வைத்து மது குடிக்கக்கூடாது என மது குடித்துக்கொண்டு இருந்தவர்களிடம் கூறினார். இது தொடர்பாக மது குடித்தவர்களுக்கும், செல்வத்துக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 
வெட்டிக்கொலை
அப்போது மது குடித்துக்கொண்டு இருந்தவர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து செல்வத்தை சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க வந்த அதே பகுதியை சேர்ந்த அனந்தகிருஷ்ணன்(23) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் கழுத்தில் பலத்த வெட்டுக்காயமடைந்த செல்வம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே சம்பவ இடத்தில் இருந்து 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். உடனே அங்கு இருந்தவர்கள் செல்வத்தை மீட்டு திருக்காட்டு்ப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அரிவாள் வெட்டில் காயமடைந்த அனந்தகிருஷ்ணன்(23) தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
வலைவீச்சு
இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட செல்வம் உடலை  கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  கொலை செய்யப்பட்ட செல்வத்துக்கு வேதவள்ளி என்ற மனைவியும், அம்பிகா என்ற மகளும், ராம்குமார் என்ற மகனும் உள்ளனர். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். 
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story