நெல்லை-தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டுபோட ஒரு மணி நேரம் ஒதுக்கீடு


நெல்லை-தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்  இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டுபோட ஒரு மணி நேரம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 6 Oct 2021 3:34 AM IST (Updated: 6 Oct 2021 3:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை-தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

நெல்லை:
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தோ்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நெல்லை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் (புதன்கிழமை), 9-ந் தேதியும் (சனிக்கிழமை) 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
2981 பேர் போட்டியின்றி தேர்வு
இந்த தேர்தலில் 27 ஆயிரத்து 3 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் போட்டியிட 98 ஆயிரத்து 151 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனைக்கு பின்பு ஆயிரத்து 166 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14 ஆயிரத்து 571 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர்.
இதைத்தொடர்ந்து 2 ஆயிரத்து 981 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இன்று முதல்கட்ட தேர்தல்
வழக்கு காரணமாக காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் கொளத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி இடத்துக்கான தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் 9 மாவட்டங்களில் 23 ஆயிரத்து 998 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 79 ஆயிரத்து 433 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 78 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கும், ஆயிரத்து 577 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் என மொத்தம் 14 ஆயிரத்து 662 இடங்களுக்கு இன்று (புதன்கிழமை) முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
7 ஆயிரத்து 921 வாக்குச்சாவடிகள்
இந்த இடங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு 7 ஆயிரத்து 921 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த தேர்தலில் ஒரு வாக்காளர், கிராம ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் என 4 பதவிக்கு உரியவர்களை தேர்வு செய்ய ஓட்டு போடவேண்டும். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. 
பாதுகாப்பு பணியில் 17 ஆயிரத்து 130 போலீசாரும், 3 ஆயிரத்து 405 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 
கொரோனா நோயாளிகள்
பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நெல்லையில் ஏற்பாடு
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, மானூர், பாப்பாக்குடி, சேரன்மாதேவி, அம்பை ஆகிய 5 ஒன்றியங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 5 ஒன்றியங்களில் 6 மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள், 62 ஒன்றிய வார்டு கவுன்சிலர்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 115 பஞ்சாயத்து தலைவர்களில் 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 110 கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு தேர்தல் நடக்கிறது. 930 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களில் 206 பேர் போட்டியின்றி தேர்வானார்கள். மீதமுள்ள 724 பதவி இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
இதில் மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு 32 பேர், ஒன்றிய வார்டுகளுக்கு 319 பேர், பஞ்சாயத்து தலைவர்களுக்கு 534 பேர், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2,121 பேர் என மொத்தம் 3,006 பேர் போட்டியிடுகிறார்கள்.
முதல் கட்ட தேர்தலுக்காக ஆண்களுக்கான 19 வாக்குச்சாவடிகள், பெண்களுக்கான 19 வாக்குச்சாவடிகள், 583 பொது வாக்குச்சாவடிகள் என மொத்தம் 621 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 1,69,765 ஆண்கள், 1,78,234 பெண்கள், 43 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3,48,042 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதில் 182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. 
பணி ஒதுக்கீடு
வாக்குப்பதிவை கண்காணிக்க மொத்தம் 20 தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், 277 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர வாக்குச்சாவடி மையங்களில் 5,035 பேர் வாக்குப்பதிவு அலுவலர்களாக பணிபுரிய உள்ளனர். அவர்கள் நேற்று அந்தந்த ஒன்றியங்களுக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்து எந்ெதந்த வாக்குச்சாவடிக்கு பணிக்கு செல்ல வேண்டும் என்று கூறி அடையாள அட்டை, பணி ஆணை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பெட்டிகளை கொண்டு செல்லும் பணி நேற்று தொடங்கியது. வாகனங்களில் தேர்தல் பணிக்கான சீட்டுகள் ஒட்டப்பட்டன. பின்னர் மண்டல வாரியாக அந்தந்த அதிகாரிகள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டிகள் லாரிகளில் ஏற்றப்பட்டது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் ஆகியவையும் வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.
தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்
வாக்குப்பெட்டிகள், தேர்தல் ஆவணங்கள், பொருட்கள் அனைத்தும் நேற்று மாலை முதல் அந்தந்த வாக்குச்சாவடிகளில் கொண்டு செல்லப்பட்டு, வாக்குப்பதிவு பணிக்காக வந்திருந்த அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் ஓட்டுப்பதிவு செய்வதற்கு தேவையான மேஜைகள், ஓட்டு யாருக்கு போடுகிறோம் என்பதை பிறர் பார்க்க முடியாத படியான தடுப்பு அட்டைகள் ஆகியவற்றை தயார் செய்தனர். மேலும் வாக்குச்சாவடியின் வெளிப்பகுதி நுழைவு வாசல் அருகில் அந்த வாக்குச்சாவடியில் நடைபெறும் தேர்தல் தொடர்பான விவரங்களையும் வாக்காளர்களுக்கு தெரியும் படி ஒட்டினார்கள். நேற்று இரவே வாக்குச்சாவடிகளை வாக்குப்பதிவுக்கு தயார் செய்தனர். நெல்லை மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 
தென்காசி மாவட்டம்
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில் இன்று, முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

Next Story