உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில், 4 ஒன்றியங்களுக்கு முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தீவிர பணியில் தேர்தல் அலுவலர்கள் துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கிராம ஊராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு அனைத்து உபகரணங்களை நேற்று மாலை 4 மணிக்குள் அனுப்பி வைப்பதற்கு கலெக்டர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி அனைத்து ஒன்றியங்களிலும் உள்ளாட்சி தேர்தலுக்கான உபகரணங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒன்றிய தேர்தல் அதிகாரிகள் மூலம் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் உபகரணங்களை நேற்று கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார். மேலும் ஜோலார்பேட்டை அருகே புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நாட்டறம்பள்ளி பகுதியிலும் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஜோலார்பேட்டை ஒன்றிய தேர்தல் அலுவலர் விநாயகம், நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story