சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ராசிபுரத்தில் மாதர் சங்கத்தினர் விறகு சுமந்து போராட்டம்


சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ராசிபுரத்தில் மாதர் சங்கத்தினர் விறகு சுமந்து போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2021 6:41 AM IST (Updated: 6 Oct 2021 6:47 AM IST)
t-max-icont-min-icon

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ராசிபுரத்தில் விறகு சுமந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசிபுரம்,

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே ஜனநாயக மாதர் சங்கத்தினர் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து விறகு சுமக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் மாதா கோவில் அருகில் இருந்து விறகு மற்றும் கியாஸ் சிலிண்டர்களை தலையில் சுமந்துகொண்டு போராட்டம் நடந்த இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.

இந்த போராட்டத்திற்கு ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ராணி தலைமை தாங்கினார். பொருளாளர் பழனியம்மாள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஒன்றிய நிர்வாகிகள் சரசு, சரோஜா, தங்கமணி, சிந்து, மல்லிகா, மணி, ராணி உள்பட ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டம் குறித்து அவர்கள் கூறியதாவது:- 

சமையல் கியாஸ் விலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரூ.610-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 9 மாதங்களில் மத்திய அரசு தொடர்ந்து விலைகளை உயர்த்தி தற்போது ரூ.950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் பொருளாதார நெருக்கடியில் அனைத்து மக்களும் அவதிப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு சமையல் கியாஸ் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது பொதுமக்களையும், பெண்களையும் பெரிதும் பாதித்துள்ளது.

பெண்கள் சமைப்பதற்கு காடுகளுக்கு சென்று விறகுகளை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் பெண்களின் வேதனையை வெளிப்படுத்தும் வகையில் மத்திய அரசு சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விறகு சுமக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

பெண்கள் விறகுகளையும், சமையல் கியாஸ் சிலிண்டர்களையும் தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story