டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை: கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம்


டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை: கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2021 11:43 AM IST (Updated: 6 Oct 2021 11:43 AM IST)
t-max-icont-min-icon

ஒரகடம் அருகே டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்டார். கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியை சேர்ந்தவர் துளசிதாஸ் (வயது 43). கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்தவர் ராம் (42), இவர்கள் இருவரும் ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தனர்.வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு விற்பனை நேரம் முடிந்தவுடன் கடையை பூட்டி விட்டு விற்பனையாளர்கள் துளசிதாஸ் மற்றும் ராம் இருவரும் கடையின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை எடுப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் துளசிதாசை கத்தியால் குத்தினர். இதை தடுக்க வந்த மற்றொரு விற்பனையாளர் ராமுவையும் அவர்கள் தாக்கியுள்ளனர். மர்ம நபர்கள் குத்தியதில் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயத்துடன் கிடந்த ராமுவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துளசிதாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கொலை குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் கொலைக்கு கண்டனம் தெரிவித்து நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடையடைப்பில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதைதொடர்ந்து டாஸ்மாக் அதிகாரிகள் டாஸ்மாக் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 10 மணிக்கு திறக்க வேண்டிய கடையை மதியம் 1 மணிக்கு திறந்து விற்பனையை தொடங்கினார்கள். இதன் காரணமாக காலையில் டாஸ்மாக் கடை முன்பு ஏமாற்றத்துடன் காத்து நின்ற மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story