மசினகுடியில் 11-வது நாளாக தேடுதல் வேட்டை: வனத்துறையினரின் வளையத்தில் இருந்து ஆட்கொல்லி புலி தப்பியது


மசினகுடியில் 11-வது நாளாக தேடுதல் வேட்டை: வனத்துறையினரின் வளையத்தில் இருந்து ஆட்கொல்லி புலி தப்பியது
x
தினத்தந்தி 6 Oct 2021 1:03 PM IST (Updated: 6 Oct 2021 1:03 PM IST)
t-max-icont-min-icon

மசினகுடியில் வனத்துறையினரின் வளையத்தில் இருந்து ஆட்கொல்லி புலி தப்பியதாக கூறப்படுகிறது. இதனால் 11-வது நாளாக ஆட்கொல்லி புலி சிக்க வில்லை. இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் பல இடங்களில் பரண்கள் அமைத்து இரவு -பகலாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி பகுதியில் புகுந்து புலி ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் மாடுகளை கொன்றதோடு, மனிதர்களை தாக்கி கொன்று உள்ளது. இதைத்தொடர்ந்து சுமார் 12 வயதான ஆட்கொல்லி ஆண் புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் அருகே தேவன் - 1, மேபீல்டு பகுதியில் பதுங்கியிருந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையின் அதிரடிப்படையினர் மும்முரமாக ஈடுபட்டனர்.

ஆனால் தொடர் தேடுதல் வேட்டை காரணமாக சுமார் 21 கி. மீட்டர் தொலைவில் உள்ள மசினகுடி வனத்துக்கு புலி இடம் பெயர்ந்தது. இதைத்தொடர்ந்து புலியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லி புலி தென்பட்டதை வனத்துறையின் கால்நடை டாக்டர்கள் குழு உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து மயக்க ஊசி துப்பாக்கியை எடுத்து புலியை பிடிக்கும் பணியில் டாக்டர்கள் தயாரானபோது கண்ணிமைக்கும் நேரத்தில் புலி புதருக்குள் சென்று தப்பியது. அதனால் மயக்க ஊசியை புதருக்குள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக இரவு பகலாக வன ஊழியர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து கண்காணித்தனர். நேற்று காலை வனத்துறையின் தேடுதல் குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு புலியை பிடிக்க தயாராகினர். ஆனால் பகல் 1 மணி வரை தேடியும் அதன் கால்தடயங்கள் மட்டுமே காணப்பட்டது. இருப்பினும் ஹல்லல்லா உள்ளிட்ட வனப் பகுதியிலும் பாதுகாப்பு உடைகளை அணிந்தபடியே வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சில இடங்களில் வேறு புலிகள் தென்பட்டது.

மேலும் டிரோன்களில் நவீன கேமராக்களை பொருத்தி வனப்பகுதியில் பறக்கவிட்டு தேடுதல் பணி நடைபெற்றது. ஆனால் ஆட்கொல்லி புலி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. வனப்பகுதியில் புலி தாக்கி வளர்ப்பு எருமை மாட்டின் உடல் கிடப்பதை வனத்துறையினர் கண்டனர். இதனால் மீண்டும் அப்பகுதிக்கு ஆட்கொல்லி புலி வரலாம் என்ற கோணத்தில் பல இடங்களில் உள்ள மரங்களில் பரண்கள் அமைத்து வன ஊழியர்கள் இரவு- பகலாக கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல கள துணை இயக்குனர் அருண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நேற்று முன்தினம் முதல் டி-23 புலியை பின் தொடர்கின்றோம். புதர் அதிகமாக இருப்பதால் பிடிப்பதில் கஷ்டமாக இருக்கின்றது. 4 கால்நடை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வனத்தில் உள்ள புதர்களில் புலி பதுங்கிக்கொள்கின்றது. இதனால் புலியை பிடிக்கும் வியூகம் மாற்றப்பட்டுள்ளது. இதற்காக 5 இடங்களில் பரண்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. பரண்களில் இருந்து கண்காணித்து மயக்க மருத்து செலுத்தி விரைவில் புலி பிடிக்கப்படும். மேலும் புலி உடல் நிலை நன்றாக இருக்கின்றது.

எருமை மாட்டை கொன்றது டி-23 புலியா? என நாளை (இன்று) தான் உறுதிப்படுத்த முடியும். தற்போது 50 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக சிங்காரா உள்பட 35 இடங்களில் கேமரா பொருத்தப்பட உள்ளது. இதுதவிர கூடுதலாக 2 கால்நடை டாக்டர்கள் மசினகுடி வர உள்ளனர். புலி நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேடப்படும் புலியை ஆட்கொல்லி என அழைக்க முடியாது. எந்த நேரத்திலும் புலி பிடிபட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story