நாகை மாவட்டத்தில் பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன
நாகை மாவட்டத்தில் பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன. நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. ஒரு சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யாமல் ஏமாற்றியது போதிய அளவு தண்ணீர் இல்லாமல் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடற்பகுதியில் நிலவும் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து லேசான சாரல் மழையாக பெய்தது. தொடர்ந்து பகல் 12 மணியளவில் பலத்த மழை பெய்தது.
இந்த தொடர் மழை காரணமாக நாகை அருகே பெருங்கடம்பனூர், புலியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், சில வயல்களில் அறுவடை செய்யப்பட்டு சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் நனைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதேபோல நாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தெத்தி, மேலநாகூர், முட்டம் பனங்குடி வட குடி, ஒக்கூர், கிராமங்களில் மழை பெய்தது.
கீழ்வேளூர் பேருராட்சி பகுதிகளான சிக்கல், ஆழியூர், வடகரை, கோகூர், நீலப்பாடி, அத்திபுலியூர், குருக்கத்தி, கூத்தூர், குருமனாங்குடி, தேவூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை கிள்ளுக்குடி, சாட்டியக்குடி வலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
திட்டச்சேரி, திருமருகல், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், ஏனங்குடி, புத்தகரம், பனங்குடி, கொட்டாரக்குடி, நரிமணம், குத்தாலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு நீடித்தது. சம்பா இளம்நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நாகை பகுதிகளில் உள்ள விவசாயிகள் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் குறுவை நெற் பயிர்கள் உள்ளன. சில வயல்களில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (நேற்று) பெய்த கன மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வயல்களில் ஆங்காங்கே நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது. வயல்களில் ஈரத் தன்மை ஏற்பட்டு உள்ளதால் எந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். மழை தொடர்ந்து நீடித்தால் சாய்ந்து கிடக்கும் பயிர்கள் அழுகும் நிலை உருவாகும். அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், அறுவடை செய்யப்பட்டு சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மழையில் நனைந்து விட்டது. இதனால் தார் பாய்களை கொண்டு விவசாயிகள் நெல் மணிகளை மூடி வைத்துள்ளனர். இதே நிலை நீடித்தால் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் முளைக்கும் நிலை ஏற்படும். எனவே நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story