புரட்டாசி மகாளய அமாவாசை; மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு மக்கள் கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
மகாளய அமாவாசை
எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் தை மாதம் வரக்கூடிய தை அமாவாசை, ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசை ஆகியவை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் சூரியனின் தென்பகுதியின் நடுப்பாகம் பூமிக்கு நேராக நிற்பதாகவும், அப்போது சந்திரனின் தென்பாகமும் நேர்க்கோட்டில் நிற்கும் என்று கூறப்படுகிறது. இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை என்று சொல்வது வழக்கம். முன்னேற்றம் ஏற்பட முன்னோர்களை வழிபட வேண்டிய நாள், மகாளய அமாவாசை ஆகும். இதுவரை திதி கொடுக்க மறந்தவர்கள் இன்றைய தினத்தில் திதி கொடுத்தால் அதை மூதாதையர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது ஐதீகம்.
தர்ப்பணம்
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் கடற்கரை பகுதிகளில் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடற்கரைகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு மக்கள் ஆங்காங்கே நீர்நிலைகளில் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தூத்துக்குடி துறைமுகம் கடற்கரை பகுதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிக அளவில் தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கினர். அவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
திருச்செந்தூர்
புரட்டாசி மகாளய அமாவாசை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
கோவில்பட்டி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் புரட்டாசி மகாளய அமாவாசையை யொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சியை மாதாங் கோவில் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டப வளாகத்தில் பொதுமக்கள் மூதாதையர்களுக்கு படைப்புகள் வைத்து வழிபாடுகள் நடத்தி சென்றனர்.
Related Tags :
Next Story