மாடுகளை கட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்ட விவசாயி கைது
பட்டிவீரன்பட்டி அருகே மின்வாரியத்தை கண்டித்து சாலையில் மாடுகளை கட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே மின்வாரியத்தை கண்டித்து சாலையில் மாடுகளை கட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்.
மின்கம்பம் சாய்ந்தது
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நல்லாம்பிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). விவசாயி. நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பெய்த பலத்தமழை காரணமாக அவருடைய வீட்டின் அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்து கீழே விழுவது போல் இருந்துள்ளது. இதைப்பார்த்த சுப்பிரமணி, மின்கம்பம் கீழே விழும் முன்பு அதனை சீரமைக்கும்படி சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளை செல்போன் மூலம் தொடர்புகொண்டு தெரிவித்தார்.
ஆனால் மின்கம்பத்தை சீரமைக்க அப்போது யாரும் வரவில்லை என்று தெரிகிறது. பின்னர் நேற்று காலையில் மின்சார வாரிய ஊழியர்கள் வந்து சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை சீரமைக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த சுப்பிரமணி, நேற்று முன்தினம் இரவே ஏன் வரவில்லை என்று கேட்டு மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
மறியலில் ஈடுபட்ட விவசாயி
ஆனாலும் ஆத்திரம் தீராத அவர் தனது 2 மாடுகளை இழுத்துக்கொண்டு திண்டுக்கல்-வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில், சாலைப்புதூர் பிரிவு பகுதிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த இரும்பு தடுப்புகளை சாலையின் குறுக்காக போட்டு, அதில் 2 மாடுகளையும் கட்டிப்போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பட்டிவீரன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட சுப்பிரமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் போராட்டத்தை கைவிடாததால் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தடுப்பில் கட்டப்பட்டிருந்த மாடுகளை போலீசார் அவிழ்த்துவிட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். கைதான சுப்பிரமணி வேடசந்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
மாடுகளை நடுரோட்டில் கட்டிப்போட்டு விவசாயி மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story