பெரும்பாறை அருகே வீடு, ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டுயானைகள்
பெரும்பாறை அருகே வீடு, ரேஷன் கடைகயை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
பெரும்பாறை:
பெரும்பாறை அருகே உள்ள பெரியூர், பள்ளத்துக்கால்வாய், மல்லியபாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த ஒருவாரமாக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் மல்லியபாறை பகுதிக்கு வந்த காட்டுயானைகள் அங்குள்ள வீரமணி என்பவரின் ஓட்டு வீட்டை சேதப்படுத்தின. நல்லவேளையாக வீட்டில் இருந்த வீரமணி, அவருடைய மனைவி ரேவதி, மகன் சூரியா, மகள் சுமித்ரா ஆகியோருடன் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறியதால் உயிர் தப்பினர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீப்பந்தம் காட்டி காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று காலை 2 யானைகள் பெரியூர், பள்ளத்துக்கால்வாய், மல்லியபாறை பகுதிகளுக்கு வந்தன.
பின்னர் அந்த பகுதிகளில் உள்ள காபி தோட்டங்களுக்குள் புகுந்த யானைகள், அங்கிருந்த முள்வேலிகளை உடைத்து சேதப்படுத்தியதுடன் வாழை, காபி, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்களையும் நாசப்படுத்தின. பின்னர் அங்கிருந்து வெளியேறிய காட்டுயானைகள் பெரியூர் ஊராட்சி சந்தனபலாப்பட்டியில் உள்ள ரேஷன்கடை ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த 4 மூட்டை ரேஷன் அரிசியை தூக்கி வீசி எறிந்து நாசப்படுத்திவிட்டு நீண்ட நேரம் அப்பகுதியில் சுற்றித்திரிந்தது. பின்னர் காட்டுயானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டு யானைகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story