வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம்: 278 இடங்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியவை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திரரெட்டி தகவல்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 278 இடங்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியவை என கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திரரெட்டி தெரிவித்துள்ளார்.
கடலூர்,
ஆய்வுக்கூட்டம்
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு கூடுதல் தலைமை செயலாளர் (வருவாய் நிர்வாக ஆணையர்) பணீந்திரரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திரரெட்டி கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள வடிகால் வாய்க்கால்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இன்னும் ஒருவார காலத்திற்குள் முடிக்க வேண்டும்.
வெள்ளத்தடுப்பு
மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் மழைக்காலங்களில் நீர்நிலைகளின் கொள்ளளவை கண்காணித்து, அதற்கேற்றார் போல் நீரினை வெளியேற்றவேண்டும். மாவட்டத்தில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதமாக மேற்கொள்ளவேண்டும். மேலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துகொள்ளவேண்டும்.
மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகள், மிக தாழ்வானவை என 278 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுதவிர 92 இடங்கள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வட்டார அளவிலான 14 மண்டல அலுவலர்கள் மற்றும் நகராட்சி அளவிலான 5 மண்டல அலுவலர்கள் நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தற்காலிக தங்குமிடம்
இந்த குழுவின் மண்டல அலுவலர்கள் புயல் பாதுகாப்பு மையம், பல்நோக்கு மையம் மற்றும் தற்காலிக தங்குமிடம், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்படவேண்டிய இடங்களில் குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முகாம்களில் தங்க வைக்கப்படும் பொது மக்களுக்கு உணவு தயாரிக்க தேவையான அரிசி, பருப்பு, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.மேலும் கொரோனா தொற்று பரவும் சூழலில் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்களை தங்க வைக்கும் போது, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களை தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போது அவர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.
24 மணிநேரமும் பணிபுரிய வேண்டும்
மாவட்டத்தில் முதல் தகவல் அளிப்பவர்கள் 3,240 பேரும், நீச்சல் வீரர்கள் 356 நபர்கள் மற்றும் பாம்பு பிடிப்பவர்கள் 26 பேரும் கண்டறியப்பட்டு, அனைவரையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தவேண்டும். மேலும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு மண்டல அலுவலரும் பேரிடர் காலத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பேரிடர் காலத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் பணிபுரிய தயார் நிலையில் இருக்கவேண்டும். அவசர சேவை ஊர்திகளும், வெள்ளப்பாதிப்பு ஏற்படும் நிலையில் பொதுமக்களை பாதுகாத்து மீட்டு வருவதற்கு படகுகளையும், பொதுமக்களை பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து செல்வதற்கு தேவையான வாகனங்களையும் தயார் நிலையில் வைக்கவும் மீன்வளத்துறை மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு அறை
மேலும் என்.எல்.சி. நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு என்.எல்.சி.யில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை செய்து, பாதிப்பில்லாமல் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார். அதனை தொடர்ந்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திரரெட்டி, கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் பேரிடர் தொடர்பான தகவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் பேரிடர் கால வானொலி 107.8 பண்பலை அலைவரிசையில் கூடுதல் தலைமை செயலாளர் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகத்தால் பேரிடர் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
கட்டணமில்லா எண்
பேரிடர் சம்பந்தமான தகவலை தெரிவிக்க பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் அவசரகால கட்டுப்பாட்டு அறையை 04142-221113, 233933, 221383 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இது தவிர கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077-ல் தொடர்பு கொண்டும் தகவல் அளிக்கலாம் என்றார்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கூடுதல் ஆட்சியர்கள் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story