தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 6 Oct 2021 10:43 PM IST (Updated: 6 Oct 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாக்கடை கால்வாயில் அடைப்பு 
திண்டுக்கல் ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சியில் உள்ள ராயர்புரம் காலனியில் சாக்கடை கால்வாய்களை தூர்வாரி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. மண், குப்பைகள் சேர்ந்தும் செடிகள் முளைத்தும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் சீராக செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும். 
-வேல்முருகன், ராயர்புரம்காலனி.
குப்பைகளால் சுகாதாரக்கேடு
தேனி மாவட்டம் கூடலூரில் ஆசிராமர்தெருவில் பொதுமக்கள் தினமும் தண்ணீர் பிடிக்கும் தொட்டி அருகே குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? 
-சிவா, கூடலூர்.
மின்கம்பம் மாற்றப்படுமா?
பழனி தாலுகா அ.கலையம்புத்தூரில் 5 மறுகால் காலனியில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. மின்கம்பத்தின் அடிப்பாகத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
-இளங்கோவன், அ.கலையம்புத்தூர்.
எரியாத தெருவிளக்கு 
அல்லிநகரம் நகராட்சி பொம்மையகவுண்டன்பட்டி வடக்கு தெருவில் ஒரு தெருவிளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் இருளில் நடமாடும் நிலை உள்ளது. எனவே, தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும். 
-முருகன், பொம்மையகவுண்டன்பட்டி.
பஸ் நிலையத்தில் ஒருவழிப்பாதை 
தேனி புதிய பஸ்நிலையத்துக்குள் கோவை, திருப்பூர் பஸ்கள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் ஒரே பாதை பயன்படுத்துகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அனைத்து பஸ்களும் உள்ளே வருவதற்கு ஒரு பாதையும், வெளியே செல்ல மற்றொரு பாதையையும் பயன்படுத்த வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-செல்வேந்திரன், தேனி.
வேகத்தடை அமைக்க வேண்டும்
வத்தலக்குண்டுவில் மதுரை சாலையில் பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடைகள் எதுவும் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் சாலையை கடப்பதற்கு பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, பள்ளிக்கூடம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும். 
-ரகுமான், வத்தலக்குண்டு.
சேதமடைந்த மின்கம்பம்
திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரை இ.பி.காலனியில் சேதம் அடைந்த மின்கம்பம் உள்ளது. பலத்த காற்று, மழையின் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. பருவமழை காலம் தொடங்க இருப்பதால், சேதமான மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும். 
-சுரேஷ், வடமதுரை.
கியாஸ் சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூல்
நத்தத்தில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர் கொண்டு வந்து வினியோகிக்கும் ஒருவர் ரூ-.1,060 வசூலிக்கிறார். ஏற்கனவே கியாஸ் சிலிண்டர் விலை அடிக்கடி உயர்வதால் மக்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையே சிலிண்டரை வினியோகிப்பவர் கூடுதல் தொகை வசூலிப்பது மக்களை மேலும் சிரமத்தில் தள்ளுகிறது. இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-ரவி, நத்தம்.

Next Story