திருநங்கைகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு


திருநங்கைகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 6 Oct 2021 11:16 PM IST (Updated: 6 Oct 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

வாழ்வதற்கு வழியின்றி தவித்துவரும் தங்களுக்கு வீட்டு மனையுடன் வீடு கட்டித்தராவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறுவோம் என்று திருநங்கைகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ராமநாதபுரம், 
வாழ்வதற்கு வழியின்றி தவித்துவரும் தங்களுக்கு வீட்டு மனையுடன் வீடு கட்டித்தராவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறுவோம் என்று திருநங்கைகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு
ராமநாதபுரம் மற்றும் ஏர்வாடி பகுதியை சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் சிவன்யா, பவித்ரா ஆகியோர் தலைமையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருநங்கைகளான எங்களை அரசு அங்கீகரித்தாலும் எங்களுக்கான அரசின் சலுகைகள் கிடைக்கவில்லை. 
மாவட்டத்தில் ஒரு பகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஆரம்ப காலத்தில் வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு இதுநாள் வரை வீட்டுமனை வழங்கப்பட வில்லை. கடந்த கொரோனா காலத்தில் அரசால் வழங்கப் பட்ட ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி மட்டுமே வழங்கினர். அதன்பின்னர் எங்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப் பட்டுஉள்ளது. திருநங்கைகளான எங்களுக்கு யாரும் வீடு வாடகைக்கு தருவதில்லை. அப்படி தந்தாலும் வாடகை பல மடங்கு உயர்த்தி வாங்குகின்றனர்.
சுயதொழில் பயிற்சி
 எங்களின் வருவாய் குறைவாக உள்ள நிலையில் வாழ்க்கையை நடத்தவே மிகவும் அவதிப்படுகிறோம். எங்களுக்கு சமூக நலத்துறை மூலம் சுயதொழில் பயிற்சி அளித்து வாழ்வாதாரம் உயர வழிவகை செய்வதாக உறுதி அளித்தனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் மற்றவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, எங்களின் வாழ்க்கைக்கு இருப்பதற்கு இடம் தேவைப்படுகிறது. உடனடியாக ஏர்வாடி, ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள திருநங்கைகளுக்கு அரசு வீட்டுமனை ஒதுக்கீடு செய்து இலவச வீடு கட்டித்தர வேண்டும். இதுதொடர்பாக பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 
அங்கீகாரம்
எனவே, இனியும் எங்களுக்கு வீடு கட்டி வழங்காவிட்டால் வாழ வழியின்றி தவிக்கும் நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறி கொள்வதை தவிர வேறு வழியில்லை. எங்களின் நிலையை உணர்ந்து திருநங்கைகள் என்று அங்கீகாரம் அளித்த தி.மு.க. அரசு எங்களின் வாழ்விடத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Next Story