கறம்பக்குடி அருகே குளத்தில் குளித்த வாலிபர் சேற்றில் சிக்கி பலி 2 நாட்கள் போராடி உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
கறம்பக்குடி அருகே குளத்தில் குளித்த வாலிபர் சேற்றில் சிக்கி பலியானார். 2 நாட்கள் போராடி உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கறம்பக்குடி:
தொழிலாளி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள காட்டாத்தி சித்தான் தெருவை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சக்திவேல் (வயது 28). இவர், பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
தேடும் பணி நிறுத்தம்
இந்நிலையில் சக்திவேல் நேற்று முன்தினம் காட்டாத்தி வீரமாகாளியம்மன் கோவில் குளத்திற்கு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் குளத்திற்கு தேடி சென்றனர். அங்கு குளத்தின் கரையில் சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மட்டும் நிறுத்தப்பட்டு இருந்தது. அவரை காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் குளத்தில் இறங்கி சக்திவேலை தேடினர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் குளத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை 4 மணி தொடங்கி இரவு 9 மணிவரை தேடியும் சக்திவேல் கிடைக்கவில்லை. பின்னர் போதியவெளிச்சம் இல்லாததால் குளத்தில் முழ்கி தேடும் பணி நிறுத்தப்பட்டது.
வாலிபர் உடல் மீட்பு
இதை தொடர்ந்து நேற்று காலை தேடும் பணி மீண்டும் தொடர்ந்தது. 4 மணி நேர போராட்டத்திற்கு பின் குளத்தின் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி சக்திவேல் இறந்த நிலையில் இருந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து ஊர் இளைஞர்கள் உதவியுடன் கயிற்றின் மூலம் அவரது உடலை மீட்டு குளத்தின் கரைக்கு கொண்டு வந்தனர். இதைதொடர்ந்து சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story