கூடுதல் வாக்குச்சாவடி அமைக்கக்கோரி வாக்காளர்கள் திடீர் சாலை மறியல்


கூடுதல் வாக்குச்சாவடி அமைக்கக்கோரி வாக்காளர்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Oct 2021 11:40 PM IST (Updated: 6 Oct 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

கூடுதல் வாக்குச்சாவடி அமைக்கக்கோரி வாக்காளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவி கிராமத்தில் மொத்த வாக்காளர்கள் 3 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். இதில் 1550 வாக்காளர்கள் உள்ள கிராம மக்களுக்கு 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. மீதமுள்ள 1550 காலனி பகுதி மக்களுக்கு 2 வாக்குச்சாவடிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. 

5 வாக்குச்சாவடிகளிலும் நேற்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. காலனி பகுதி மக்களுக்கு 2 வாக்குச்சாவடிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்ததால், வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த காலனி பகுதி வாக்காளர்கள் நேற்று மதியம் 3 மணியளவில் திடீர் சாலை மறியல் செய்தனர். அப்போது வாக்களிக்க நீண்ட நேரம் ஆவதால், தங்கள் பகுதிக்கு கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் தேர்தல் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அமைத்து கொடுக்கப்படும் என உறுதியளித்தனர். தொடர்ந்து காலனி பகுதி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அமைத்து கொடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த திடீர் சாலை மறியலால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story