உளுந்தூர்பேட்டை ரிஷிவந்தியம் பகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் சாலைமறியல் ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டை ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் சம்பளம் வழங்கக்கோரி வாக்குச்சாவடி அலுவர்கள் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உளுந்தூர்பேட்டை
சாலை மறியல்
உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றுவதற்கு 42 ஆசிரியர்கள் காத்திருப்போர் பட்டியலில் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மாலையில் தேர்தல் முடிந்த பின்னர் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஊரகவளர்ச்சி துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஒன்றிய அலுவலகம் முற்றுகை
அதேபோல் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சிலரின் பெயர் ஊதியம் வழங்கவதற்கான பட்டியலில் விடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அலுவலர்கள் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி பெற்று ஊதியம் வழங்குவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story