திருவாரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில்  ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2021 6:55 PM GMT (Updated: 6 Oct 2021 6:55 PM GMT)

திருவாரூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்:
திருவாரூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
முன்னதாக நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் பேசுகையில், விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பழைய நடைமுறைப்படி விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்றார்.
ஆர்ப்பாட்டம்
இதனை தொடர்ந்து விவசாயிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் போது மத்திய இணை மந்திரியின் மகன் தனது காரை மோதி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
 மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
ரூ.1219.21 கோடி கடன்
சம்பா, தாளடி நெல்லினை காப்பீடு செய்ய அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி கடைசி நாளாகும். ஒரு ஏக்கருக்கு ரூ.488.25 பிரிமியம் செலுத்த வேண்டும். எனவே சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் சம்பா, தாளடி நெல் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.300 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 15,604 விவசாயிகளுக்கு ரூ.45.50 கோடி விவசாய கடன் மற்றும் ரூ.32.14 கோடி விவசாய நகைக்கடன் ஆக மொத்தம் ரூ.77.65 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 
மற்றும் வணிக வங்கிகளுக்கு ரூ.2900 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 85,405 விவசாயிகளுக்கு ரூ.19.21 கோடி விவசாய கடன் மற்றும் ரூ.1,200 கோடி விவசாய நகை;கடன் ஆக மொத்தம் ரூ.1219.21 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் 2020 ஆண்டு குறுவை பருவத்தில் சுமார் 44,600 விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு 49,796 ஏக்கர் குறுவை நெற்பரப்பு காப்பீடு செய்யப்பட்டது. இதுவரை 24,901 விவசாயிகளுக்கு ரூ.17 கோடியே 35 லட்சத்து 92 ஆயிரம் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை இணை இயக்குநர் சிவகுமார், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஷெப்சிபா நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story