மர்ம காய்ச்சலுக்கு தாய்-சிசு பலி


மர்ம காய்ச்சலுக்கு தாய்-சிசு பலி
x
தினத்தந்தி 7 Oct 2021 1:35 AM IST (Updated: 7 Oct 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

மர்ம காய்ச்சலுக்கு தாய்-சிசு உயிரிழந்தனர்.

செந்துறை:

காய்ச்சலால் பாதிப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமிழியம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி விஜி(வயது 26). இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து அவரை உறவினர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கிருந்த டாக்டர்கள், அவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிசுவிடம் எவ்வித அசைவுகளும் இல்லை என்று கூறி தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாய்-சிசு சாவு
அங்கு டாக்டர்கள், விஜியின் வயிற்றில் இருந்த ஆண் சிசு இறந்து விட்டதாக கூறி, அறுவை சிகிச்சை மூலம் இறந்த சிசுவை வெளியே எடுத்தனர். இந்த நிலையில் விஜி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி மற்றும் சுகாதார துறையினர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.குமிழியம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் 30-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் இணைந்து தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி மற்றும் அவரது வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story