பெரம்பலூர் தெப்பக்குளத்தில் குவிந்த பொதுமக்கள்
மகாளய அமாவாசையையொட்டி பெரம்பலூர் தெப்பக்குளத்தில் குவிந்த பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனா்.
பெரம்பலூர்:
பொதுமக்கள் குவிந்தனர்
ஆண்டுதோறும் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தெப்பக்குள ஓரத்தில் காலை 6 மணி முதலே முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அமாவாசையையொட்டி திருச்சி அம்மா மண்டப படித்துறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள படித்துறைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பெரம்பலூரில் இருந்து பொதுமக்கள் செல்லவில்லை. இதனால் பெரம்பலூர் தெப்பக்குளம் ஓரத்தில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
தர்ப்பணம்
அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் வேண்டி தர்ப்பணம் செய்தனர். இதில் புரோகிதர்கள், சிவாச்சாரியார்கள் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை ஒன்றாக வரிசையாக அமரவைத்து, அவர்களுடைய மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர். அப்போது தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபட்டு, அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர்.
Related Tags :
Next Story