பெங்களூருவில் கனமழை கொட்டித்தீர்த்தது
பெங்களூருவில் கனமழை கொட்டித்தீர்த்ததால், சாலைகளில் வெள்ளம் தேங்கி நின்றது. கால்வாயில் பசு மாடு அடித்து செல்லப்பட்டது. மெட்ரோ தூண் பகுதியில் குழி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பெங்களூரு:
மழைநீர் கால்வாய்
வங்க கடலில் புயல் சின்னம் உருவானதை அடுத்து கர்நாடகத்தில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு பெய்த கனமழையால், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி தவித்தது. பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்ததை அடுத்து கார்கள் உள்பட வாகனங்கள் சேதம் அடைந்தன. பசு மாடுகள் உள்பட கால்நடைகள் மழைநீர் கால்வாயில் அடித்து செல்லப்பட்டன.
இந்த நிலையில் அதே போல் நேற்று முன்தினம் இரவும் கனமழை கொட்டித்தீர்த்தது. இரவு முழுவதும் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்குள் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. சில இடங்களில் வயதான மரங்கள் முறிந்து விழுந்தன. நேற்று பகல் 12 மணி வரை சாரல் மழை பெய்தபடியே இருந்தது. இதனால் நகரில் மந்தமான சீதோஷ்ண நிலை நிலவியது.
பசு மாடு அடித்து சென்றது
மைசூரு ரோட்டில் ஞானபாரதி பகுதியில் உள்ள 489-வது மெட்ரோ தூண் பகுதியில் மண் உள்ளே இழுக்கப்பட்டு பள்ளம் ஏற்பட்டது. சுமார் 3 அடி அளவுக்கு அங்கு குழி உண்டானது. அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்று கருதி அக்கம் பக்கத்தினர் அந்த குழியில் கற்களை எடுத்து போட்டி மூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த மெட்ரோ ரெயில் அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தனர்.
ஒரு பசு மாடு மழைநீர் கால்வாயில் அடித்து செல்லப்பட்டது. அந்த பசு மாடு ஞானபாரதி பகுதியில் உள்ள கால்வாயில் தென்பட்டது. உடனே அதை அங்கிருந்த மக்கள் கயிறு கட்டி மீட்டனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்த பசுமாடு அடித்து செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டுள்ளன. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சில நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், குழியின் ஆழம் தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து அடிபடும் சம்பவங்களும் நடக்கின்றன.
Related Tags :
Next Story