‘தினத்தந்தி’ புகார் பெட்டி-விபத்து அபாயம்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி-விபத்து அபாயம்
x
தினத்தந்தி 7 Oct 2021 2:44 AM IST (Updated: 7 Oct 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டி-விபத்து அபாயம்

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடைபாதையில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மீட்டர் பெட்டியில் மூடி இல்லாமல் பாதுகாப்பின்றி உள்ளது. மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் மீட்டர் பெட்டியை உயரமான இடத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                       -தமிழரசு, ஆரல்வாய்மொழி.
சுகாதார சீர்கேடு 
வேர்க்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட மாவறவிளையில் கழிவு நீர் ஓடை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், ஓடையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
                                           -அஜின், மாவறவிளை.
பஸ்நிலையத்தில் நாய்கள் தொல்லை
குளச்சல் பஸ் நிலையத்தில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவை திடீரென பொதுமக்களை விரட்டுகிறது. இதனால், பஸ்நிலையத்துக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                -ஆனந்த் குளச்சல்.
ஓடையை தூர்வார வேண்டும்
நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பேயன்குழியில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இந்த ஆட்ேடா நிறுத்தத்தின் அருகில் உள்ள மழைநீர் ஓடை மண் நிரம்பி புற்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                -வாசு ,பேயன்குழி.
வேகத்தடை தேவை
கன்னியாகுமரி-ராஜாங்கமங்கலம் செல்லும் சாலையில் ஈத்தாமொழி சந்திப்பு உள்ளது. முக்கிய சந்திப்பான இந்த பகுதியில் எப்போது வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் மிக வேகமாக செல்கின்றன. இதனால், விபத்துக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
                                -சீனிவாசன்,ஈத்தாமொழி சந்திப்பு.
மின் விளக்குகள் மாற்றப்படுமா?
பாகோடு பேரூராட்சிக்குட்பட்ட மலயரம்தோட்டம் சந்திப்பில் இருந்து இளந்திருத்தி சமூக நலக்கூடம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், இந்த சாலையில் உள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த விளக்குகளை மாற்றி புதிய விளக்குகளை பொருத்த வேண்டும்.
                     -ஜெயாகர் தேவதாசன், மலயரம்தோட்டம்.
சாலையை சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் அருகில் இருந்து தளவாய் தெரு செல்லும் சாலை சேதமடைந்து பல மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
           -ஹரிஹரன், வடிவீஸ்வரம்.
மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு பகவதிபுரத்தில் உள்ள எப்1/15 மின்கம்பத்தின் மேல் பகுதி உடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அந்த வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள் மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -ரஞ்சித் சிங்,
 சிவசுப்பிரமணியபுரம்.

Next Story