கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 6 Oct 2021 9:16 PM GMT (Updated: 6 Oct 2021 9:16 PM GMT)

களியக்காவிளை அருகே கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

களியக்காவிளை, 
களியக்காவிளை அருகே கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
தீவிர சோதனை
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக ரேஷன் பொருட்கள் வாகனங்களில் அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் குறைந்த விலைக்கு வாங்கி அதை வாகனங்களில் கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
 இதை தடுப்பதற்காக வருவாய்த்துறையினர் மற்றும் மாவட்ட உணவு தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் தீவிர சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
வேகமாக வந்த லாரி
இந்தநிலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லாரியை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், லாரியை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் தங்களது வாகனங்களில் லாரியை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்றனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
அதிகாரிகளை கண்டதும் லாரியை களியக்காவிளை அருகே உள்ள பழைய பாலம் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் லாரியை சோதனை செய்தனர். 
அப்போது, அதில் மூடை மூடையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ெமாத்தம் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு கிட்டங்கியிலும், லாரியை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும், லாரி உரிமையாளர் மற்றும் அரிசியை கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story