பாளையங்கோட்டை திருமண மண்டபத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நெல்லை:
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தங்களுக்கு தேர்தல் பணி ஒதுக்காததை கண்டித்து பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல்
நெல்லை மாவட்டத்தில் நேற்று ஊரக உள்ளாட்சி முதல் கட்ட தேர்தல் நடந்தது. இதற்காக 5,035 தேர்தல் அலுவலர்கள் 5 பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான தேர்தல் பணி ஒதுக்கீடு, கணினி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட திருமண மண்டபத்தில் தங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பணி நியமன ஆணையுடன் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு நேற்று முன்தினம் மாலையே வந்தனர்.
காத்திருப்போர் பட்டியல்
பாளையங்கோட்டை யூனியனுக்கான அலுவலர்கள் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்திற்கு நேற்று முன்தினம் வந்தனர். இரவு அங்கேயே தங்கினார்கள்.
இந்தநிலையில் பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில், அந்த மண்டபத்தில் இருந்தவர்களை பார்த்து நீங்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் வேறு எங்கும் செல்லக்கூடாது. திடீரென தேர்தல் பணிக்கு செல்ல வேண்டும.் ஆகவே உங்களுடைய பணி நியமன ஆணையை எங்களிடம் தந்துவிடுங்கள் என்று கூறி வாங்கி சென்றுள்ளனர்.
அதன்பின்னர் வாக்காளர்களை அடையாளம் காணும் நிலை 1 பிரிவிலுள்ள தேர்தல் அலுவலர்களுக்கு உங்களுக்கு தேர்தல் பணி கிடையாது. சம்பளம் கொடுக்க படமாட்டாது என்று கூறியதாக தெரிகிறது.
போராட்டம்
தேர்தல் பணி ஒதுக்காததை கண்டித்து நேற்று பாளையங்கோட்டையில் திருமண மண்டபத்தில் இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் (அதாவது ஏ-1 நிலை பிரிவு அலுவலர்கள்) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே 3 பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளோம். இதுவரை சம்பளம் கொடுக்கவில்லை. எங்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டது. தற்போது பணி கிடையாது என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல, எங்களுக்கு உரிய சம்பளத்தை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும,் என்றனர்.
Related Tags :
Next Story