வடநெம்மேலி வாக்குச்சாவடி மையத்தில் செல்போனுடன் அமர்ந்திருந்த முகவரை கண்டித்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்


வடநெம்மேலி வாக்குச்சாவடி மையத்தில் செல்போனுடன் அமர்ந்திருந்த முகவரை கண்டித்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 7 Oct 2021 5:13 AM GMT (Updated: 7 Oct 2021 5:13 AM GMT)

வடநெம்மேலி வாக்குச்சாவடி மையத்தில் செல்போனுடன் அமர்ந்திருந்த முகவரை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கண்டித்தார்.

மாமல்லபுரம், 

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. வடநெம்மேலி ஊராட்சி பகுதியில் ஒரு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று திடீர் அய்வு செய்தார்.

அப்போது வாக்குச்சாவடியில் முகவர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு கட்சியின் முகவர் தேர்தல் விதிமுறைகளை மீறி செல்போனை தனது பாக்கெட்டில் வைத்திருந்தார். அவரை அழைத்து கலெக்டர் ராகுல்நாத் செல்போனுடன் எப்படி உள்ளே வந்தீர்கள் என்று கண்டித்தார்.

பின்னர் அந்த முகவர் தனது செல்போனை வெளியே எடுத்து சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு வாக்குச்சாவடிக்குள் வந்து அமர்ந்தார். பின்னர் அதிகாரிகளிடம் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறதா? என கலெக்டர் கேட்டறிந்தார்.

18 வயது நிரம்பிய முதல் நிலை பெண் வாக்காளர்கள் பலர் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்ததை வடநெம்மேலி மற்றும் திருவிடந்தை வாக்குச்சாவடி மையங்களில் காண முடிந்தது. அதேபோல் மாமல்லபுரம் அடுத்த காரணை ஊராட்சியில் உள்ள விவசாய தொழில் செய்யும் வாக்காளர்கள் பலர் நேற்று விவசாய நடவு, நாற்று பறித்தல் உள்ளிட்ட வேலைகளை செய்யாமல் ஆர்வமுடன் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு வந்ததை காண முடிந்தது.

இந்த கிராமத்தில் வயதானவர்களை வாக்களிக்க வைக்க வாக்குச்சாவடி மையத்திற்கு பலர் வீல் சேரில் தள்ளி வந்து உதவினர். பட்டிபுலம், கொக்கிலமேடு உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன் பிடி தொழிலுக்கு செல்லாமல் குடும்பம், குடும்பமாக வந்து அங்குள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்களித்துவிட்டு சென்றதை காண முடிந்தது.

பல வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் பலர் வேட்பாளர்கள் வழங்கிய மதுவை குடித்துவிட்டு தள்ளாடிய நிலையில் வாக்களிக்க வந்த காட்சியையும் காண முடிந்தது.

Next Story