உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆஜர்


உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆஜர்
x
தினத்தந்தி 7 Oct 2021 10:13 PM IST (Updated: 7 Oct 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

சுங்கச்சாவடியை அடித்து சேதப்படுத்திய வழக்கில் உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆஜரானார்.

உளுந்தூர்பேட்டை, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சுங்கச்சாவடி அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் தொடரப்பட்டது.

விழுப்புரம் கோர்ட்டுக்கு மாற்றம்

இந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் நடைபெற்றது.
அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட செயலாளர் உள்பட 12 பேர் கோர்ட்டில் ஆஜராகினர். 2 பேர் ஆஜராகவில்லை. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், இந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட அமர்வுக்கு மாற்றியதோடு அடுத்த விசாரணை விழுப்புரத்தில் வருகிற 20-ந் தேதி நடைபெறும் என உத்தரவிட்டார்.

பேட்டி

பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், இவ்வழக்கை சட்டப்படி சந்தித்து நிரபராதியாக வெளியே வருவேன். எந்த காரணத்திற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தொடங்கியதோ, அதற்கு ஏற்றவாறு எனது கோரிக்கைகள் அனைத்தையும் தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். தமிழர் வேலை தமிழருக்கே என்பது உள்பட எனது கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வரும் முதல்-அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Related Tags :
Next Story