புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சி பிரிவு


புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில்  கொரோனா தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சி பிரிவு
x
தினத்தந்தி 7 Oct 2021 10:25 PM IST (Updated: 7 Oct 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி, அக்.
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள    செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆராய்ச்சி பிரிவு
தற்போது ஆராய்ச்சியில் உள்ள புதிய கொரோனா தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஜிப்மரில் புதிதாக ஒரு தடுப்பூசி மருத்துவ ஆராய்ச்சி பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு இந்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் ஒரு பிரிவான பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் தனது மிஷன் கோவிட் சுரக்‌ஷா திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிக்கிறது.
தற்போது 6 கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசர பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்க ஒரு தெளிவான தேவை உள்ளது. இத்தகைய புதிய தடுப்பூசிகள் உலகளாவிய தேவை இடைவெளியை பூர்த்தி செய்ய மட்டுமல்லாமல்  அதிக  செயல் திறன், குறைவான பக்க விளைவுகள், நீண்ட கால பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் ஒரே ஒரு டோஸ், நாசித்துவாரங்களில் தெளிப்பு அல்லது சொட்டு மருந்து போன்ற மாற்று வழிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு போன்ற பல மேம்பட்ட அம்சங்களுக்கும் புதிய தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.
மருத்துவ பரிசோதனை
மேலும் எதிர்காலத்தில் கொரோனா ஏற்படுத்தும் வைரசின் மரபணு மாற்றங்களை கொண்ட புதிய வகைகள் வெளிப்படும்போதும் புதிய தடுப்பூசிகள் தேவைப்படலாம். எனவே உலகளவில் புதிய கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சிகள்   நடந்து வருகின்றன. தற்போது 120-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மருத்துவ ஆராய்ச்சியின்   பல்வேறு கட்டங்களில் உள்ளன.
தடுப்பூசிகள் புதிதாக உருவாக்கப்படுவதால் இவை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஜிப்மரில் உள்ள கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி பிரிவு அத்தகைய வளர்ச்சியில் பங்கு வகிக்கும். 
புதிய தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளை விரைவாக நடத்துவதற்கு உதவி செய்ய ஜிப்மரில் உள்ள கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி பிரிவு, புதிய தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்க ஆர்வமுள்ள நபர்களின் தொடர்பு பட்டியலை முன்கூட்டியே தயாரிக்கிறது.
பூஸ்டர் தடுப்பூசி
பொதுமக்கள் ஒவ்வொருவரும் புதிய கொரோனா தடுப்பூசிகள் மீதான சோதனைகளில் சேர முன்வந்து நம் நாட்டிற்கும் அதன் குடிமக்களுக்கும்  உதவலாம். இதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஏற்கனவே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகளை எடுத்துள்ளவர்களும் பங்களிக்க முடியும். ஏனெனில் சில சோதனைகளில் பூஸ்டர் தடுப்பூசிகள் இருக்கலாம்.
இவ்வாறு  அந்த செய்திக் குறிப்பில் இயக்குனர் ராகேஷ் அகர்வால் கூறியுள்ளார்.


Next Story