ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 7 Oct 2021 11:23 PM IST (Updated: 7 Oct 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவரை கைது செய்யக்கோரி ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஆரணி

ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவரை கைது செய்யக்கோரி ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கல்லால் தாக்குதல்

ஆரணியை அடுத்த லாடப்பாடி கிராம ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பி.வெங்கடேசன் ( வயது 45) என்பவர் இருந்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த 3-வது வார்டு உறுப்பினர் சாமந்திகுமரன் மகன் சாரதி என்பவருக்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் காரணமாக அடிக்கடி பிரச்சினை நடந்து வருகிறது. 

இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் 3-வது வார்டு பகுதிக்குச் சென்றபோது, அங்கிருந்த சாரதி எங்களுக்கு ஏன் அரசு திட்டத்தில் ஆட்டுக் கொட்டகை கட்டித்தரவில்லை? எனக் ேகட்டு அவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

அதில் ஆத்திரம் அடைந்த சாரதி கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனின் மூக்கில் தாக்கினார். அதில் அவர் படுகாயம் அடைந்த அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கைது செய்யக்கோரிக்கை

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதைக் கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவரை கைது செய்யக்கோரியும் ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அல்லிராணி, துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ரூபன்குமார் ஆகியோர் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உடனடியாக வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவரை கைது செய்கிறோம், எனக் கூறியதும் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து மாலை சாரதியை, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story