திருவண்ணாமலை அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவி கொலை


திருவண்ணாமலை அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவி கொலை
x
தினத்தந்தி 7 Oct 2021 11:23 PM IST (Updated: 7 Oct 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். 

கட்டிட மேஸ்திரி

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் காந்தபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவரும், திருவண்ணாமலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த சகிலா (30) என்பவரும் கடந்த 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இந்த நிலையில் முருகன் தினமும் மது குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த சகிலா நேற்று முன்தினம் முருகனிடம் கோபித்து கொண்டு ஆலத்தூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. 

அன்று இரவு முருகன் போதையில் ஆலத்தூரில் உள்ள மனைவியின்  தாய் வீட்டிற்கு சென்ற அவர், தன்னுடன் வீட்டிற்கு வருமாறு மனைவியை அழைத்து உள்ளார். 

அம்மிக்கல்லை போட்டு கொலை 

அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் நள்ளிரவில் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து சகிலாவின் தலையில் போட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து முருகன் தப்பி ஓடிவிட்டார். 
சகிலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் சகிகலா பரிதாபமாக இறந்து கிடப்பது தெரிந்தது. 

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 

தொடர்ந்து சகிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 கைது

இதற்கிடையில் காந்தபாளையத்தில் பதுங்கி இருந்த முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
காதலித்து திருமணம் செய்த மனைவியை அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story