நாமக்கல் மாவட்டத்தில் 141 வாக்குச்சாவடிகளில் நாளை வாக்குப்பதிவு-தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், நாளை 141 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
நாமக்கல்:
உள்ளாட்சி தேர்தல்
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் (6-வது வார்டு) பதவி, எருமப்பட்டி ஒன்றியத்தில் 15-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி, 5 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 18 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 25 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி, 22-ந் தேதி முடிவடைந்தது. 2 ஊராட்சி தலைவர்கள் பதவி மற்றும் 8 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 15 இடங்களுக்கு 63 பேர் போட்டியிடுகின்றனர்.
141 வாக்குச்சாவடிகள்
இவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து வந்தனர். இந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.இதற்காக 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் 141 வாக்குச்சாவடிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் 67 ஆயிரத்து 720 பேர் வாக்களிக்க உள்ளனர். 35 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டு இருப்பதால், அவற்றில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story