குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சமயபுரம்
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் மனநலம் பாதிக்கப்பட்டோர் முறைப்படி 48 நாட்கள் விரதம் இருந்து இங்கு வந்து தங்கினால் வினைகள் யாவையும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் திருப்பதிக்கு சென்று தங்களது பிரார்த்தனைகளை செலுத்த முடியாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனைகள் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக இத்தலம் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தகோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9.15 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன அதனைத்தொடர்ந்து கருடன் படம் வரையப்பட்ட கொடியினை கோவில் அர்ச்சகர்கள் கொடிமரத்தில் 9.30 மணிக்கு ஏற்றினர். அதைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறை சேவை நடைபெற்றது.
விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கு சுவாமி பல்லக்கில் எழுந்தருளுகிறார். அதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) ஹம்ச வாகனத்திலும், அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் முறையே ஹனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம் போன்ற வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். வருகிற 14-ந் தேதி குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார்.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. 16-ந் தேதி மாலை 4 மணிக்கு புண்ணியாக வாசனம், இரவு தீபாராதனை நடைபெறுகிறது. 17-ந் தேதி இரவு 9 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சேவை சாதிக்கிறார். தொடர்ந்து கண்ணாடி அறை சேவை நடைபெறுகிறது.
இணையதளத்தில் காண ஏற்பாடு
விழா நாட்களில், அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் டோக்கன் அளித்து பெருமாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பக்தர்கள் நின்று செல்வதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் சவுக்கு கட்டைகள் கட்டப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story