திண்டுக்கல்லில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா தொடக்கம்


திண்டுக்கல்லில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா தொடக்கம்
x
தினத்தந்தி 8 Oct 2021 1:46 AM IST (Updated: 8 Oct 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.

முருகபவனம்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் நவராத்திரி விழாவும் ஒன்று. 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் துர்காதேவியின் ஒன்பது அலங்காரங்களை அலங்கரித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கி வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. 
அதன்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ராஜாங்கம் அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) புன்னைமர கிருஷ்ணன், நாளை சிவபூஜை அலங்காரம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து 10-ந்தேதி கஜலட்சுமி, 11-ந் தேதி சேஷ சயனம், 12-ந்தேதி ராஜராஜேஸ்வரி, 13-ந்தேதி துர்க்கை, 14-ந்தேதி சரசுவதி, 15-ந்தேதி கோவில் உள் பிரகாரத்தில் அம்பு போடுதல் நடைபெற்று நவராத்திரி விழா நிறைவேறுகிறது. அதைத்தொடர்ந்து 16-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 
மேலும் திண்டுக்கல் நத்தம் ரோடு ரத்தன விநாயகர் கோவில், ராம்நகர் விநாயகர் கோவில், தெற்கு ரதவீதி அங்காள பரமேஸ்வரி கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து நவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. கொரோனா பரவல் தொற்று காரணமாக கோவில்களில் நடைபெறும் நவராத்திரி விழா பக்தர்கள் அனுமதி இன்றி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story