திண்டுக்கல் அருகே கண்மாயில் பிணம் போன்று மிதந்த வாலிபரால் பரபரப்பு
திண்டுக்கல் அருகே கண்மாயில் பிணம் போன்று மிதந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லை அடுத்த கொட்டபட்டி அருகே ஆலங்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் நேற்று காலை வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்ததை பொதுமக்கள் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது கண்மாயில் மிதந்த பிணத்தின் அருகே சென்று போலீசார் பார்த்தனர். அப்போது அங்கு பிணமாக மிதந்த வாலிபர் உயிரோடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கண்மாய் கரைக்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த வாலிபர் கொட்டபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான ரெங்கநாதன் (வயது 32) என்பதும், மீன் பிடிப்பதற்காக வந்த அவர் போதையில் சுமார் 2 மணி நேரம் கண்மாயில் மிதந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ரெங்கநாதனுக்கு போலீசார் அறிவுரை கூறி, இனிமேல் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகாசனம் செய்வதாக கூறி ஒருவர் தண்ணீரில் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திண்டுக்கல் அருகே வாலிபர் போதையில் கண்மாயில் மிதந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story