கணித ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு
புதுச்சத்திரம் அருகே அரசு பள்ளி கணித ஆசிரியரை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவர்கள் மனு அளித்தனர்.
கடலூர்,
புதுச்சத்திரம் அருகே ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முதுகலை கணித ஆசிரியராக சூசைமரியநாதன் என்பவர் பாடம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கு அந்த பள்ளி மாணவ-மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பிலும் தலைவர் ராமு தலைமையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முதுகலை கணித ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று அவர்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டனர். ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவை நாங்கள் மதிக்க வேண்டும் என்று அவர் கூறியதாக தெரிகிறது.
மனு
இதையடுத்து அந்த பள்ளி மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமு தலைமையில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் 290 மாணவ- மாணவிகள் படிக்கிறோம். அனைவரும் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் அனைவரும் கணித பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறோம். அவரை நம்பி எங்கள் பள்ளிக்கு தனியார் பள்ளியை விட்டு விட்டு அரசு பள்ளிக்கு மாணவர்கள் வந்து சேர்ந்து படித்தார்கள்.
பணி அமர்த்த வேண்டும்
ஆனால் அவரை திடீரென வேறு பள்ளிக்கு இடம் மாற்றம் செய்து விட்டார்கள். இதனால் கிராமப்புற மாணவர்களின் உயர் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. உயர் படிப்புக்கு கணித பாடம் முக்கியம். தற்போது எங்களின் எங்களின் படிப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே கிராமப்புற மாணவ-மாணவிகள் நலன் கருதி, கணித ஆசிரியரை மீண்டும் எங்கள் பள்ளியிலேயே பணி அமர்த்த வேண்டும். வேறு பள்ளிக்கு மாற்றியை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மனுவை பெற்ற அவர், இது பற்றி உயர் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் கணித ஆசிரியை மீண்டும் எங்கள் பள்ளியில் நியமிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று கூறி மாணவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story