ராஜீவ்காந்தி சிலைக்கு காவி துண்டு
ஆற்றூரில் ராஜீவ்காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவட்டார்,
ஆற்றூரில் ராஜீவ்காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிலைக்கு காவி துண்டு
குமரி மாவட்டம் ஆற்றூர் சந்திப்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு சிலை உள்ளது. இந்த சிலையில் நேற்று மதியம் காவி துண்டு சுற்றப்பட்டிருந்தது. இதனை படம் பிடித்த சிலர் சமூக வலைத் தளங்களில் பரப்பினர்.
இதனை பார்த்த காங்கிரசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஆற்றூர் நகர காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், ராஜீவ்காந்தி சிலையில் சுற்றப்பட்டிருந்த காவி துண்டை அகற்றினார். பின்னர் மாநில பொருளாளர் ரூபி மனோகரன், மாவட்ட தலைவர் தாரகை கத்பட் தலைமையில் மாவட்ட துணை தலைவர்கள் ஜாண் சேவியர், ராஜரெத்தினம் மற்றும் ஏராளமான காங்கிரசார் விரைந்து வந்து, போலீசாரிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டனர்.
பரபரப்பு
பின்னர் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆற்றூர் புளிய மூடு பகுதியைச் சேர்ந்த சசி (44) என்பவர் மதுபோதையில் காவி துண்டை ராஜீவ்காந்தி சிலைக்கு அணிவித்தது தெரிய வந்தது.
இவர் தினமும் ராஜீவ்காந்தி சிலையை சுத்தம் செய்து வந்தார். மதுபோதையில் இருந்த அவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் அவரை யாரேனும் தூண்டி விட்டு ராஜீவ்காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story