சுரண்டை-ஆலங்குளத்தில் தேர்தல் மோதல்: வேட்பாளர் உள்பட 135 பேர் மீது வழக்கு
வேட்பாளர் உள்பட 135 பேர் மீது வழக்கு
ஆலங்குளம்:
சுரண்டை, ஆலங்குளம் அருகே ேதர்தல் மோதல் தொடர்பாக வேட்பாளர் உள்பட 135 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பதற்றம் நீடிப்பதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பஞ்சாயத்து தலைவர் பதவி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் நாரணாபுரம் பஞ்சாயத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நாரணாபுரம் கிராமத்தை சேர்ந்த சண்முகத்தாய், அருகே உள்ள அ.மருதப்பபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வி ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இந்த 2 கிராமங்களுக்கு இடையே பஞ்சாயத்தை பிரிப்பது தொடர்பாக ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அதிரடி படையினர் மீட்டனர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாரணாபுரத்தில் வாக்குப்பதிவு நடந்தது. அங்கு வேட்பாளர் செல்வியின் கணவர் மணிமாறன் என்பவர் காரில் வந்தார். அப்போது, அங்கு திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதில் மணிமாறனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்து அங்கு வந்த அ.மருதப்பபுரத்தை சேர்ந்த பொதுமக்கள், நாரணாபுரத்தை சேர்ந்த 6 பூத் ஏஜெண்டுகளை சிறைபிடித்தனர். பதிலுக்கு நாரணாபுரம் மக்கள் அ.மருதப்பபுரத்தை சேர்ந்த 3 பூத் ஏஜெண்டுகளையும், வாக்குச்சாவடி ஊழியர்களையும் சிறைபிடித்தனர். மேலும் வாக்குப்பெட்டிகளை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் அதிரடிபடை உதவியுடன் வாக்குப்பெட்டியையும், ஊழியர்களையும் நள்ளிரவில் மீட்டு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டவர்கள் அவரவர் கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் ஆலங்குளம் போலீசில் புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், இருதரப்பை சேர்ந்த தலா 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கழுநீர்குளம் பஞ்சாயத்து
இதேபோல் கீழப்பாவூர் யூனியன் கழுநீர்குளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அதே ஊரைச் சேர்ந்த முருகன், ஆண்டபெருமாள் ஆகியோர் போட்டியிட்டனர். அங்குள்ள ஒரு வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு மேல் அதிக வாக்காளர்கள் வாக்களிக்காமல் நின்றுகொண்டு இருந்ததால் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.
அப்போது, ஆண்டபெருமாள் தரப்பைச் சேர்ந்த ஒரு சிலர் இங்கு கள்ள ஓட்டுப்பதிவு செய்வதாக கூறி தகராறில் ஈடுபட்டனர். இதில் முருகன் தரப்பைச் ேசர்ந்த இசக்கிமுத்து என்பவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
வேட்பாளர் மீது வழக்கு
இதையடுத்து இசக்கிமுத்து மனைவி தங்கம்மாள் தலைமையில் அங்கு 100-க் கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வீரகேரளம்புதூர் போலீசார் விரைந்து வந்து நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இசக்கிமுத்துவை தாக்கியதாக ஆண்டபெருமாள் உள்பட 15 பேர் மீதும், சாலை மறியலில் ஈடுபட்டதாக இசக்கிமுத்து மனைவி தங்கம்மாள் உள்பட 100 பேர் மீதும் வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story