சென்னையில் 2,830 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம்


சென்னையில் 2,830 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 8 Oct 2021 9:22 AM IST (Updated: 8 Oct 2021 9:22 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 2,830 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம் விதித்தனர்.

சென்னை,

சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட தியாகராய நகர், பாண்டிபஜார் பகுதியில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இருக்கிறதா? என பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் அங்குள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் இருந்து சுமார் 175 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரையிலான 49 நாட்களில் 7 ஆயிரத்து 328 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2 ஆயிரத்து 830 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.6 லட்சத்து 92 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story