தண்டையார்பேட்டையில் பெயிண்ட் குடோனில் தீ விபத்து


தண்டையார்பேட்டையில் பெயிண்ட் குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 8 Oct 2021 9:51 AM IST (Updated: 8 Oct 2021 9:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தண்டையார்பேட்டையில் பெயிண்ட் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் ஆனந்த் (வயது 45). இவர், தண்டையார்பேட்டையை அடுத்த பரமேஸ்வரி நகர் ஐ.ஓ.சி. அருகே குடோனில் பெயிண்ட், தின்னர், வார்னிஷ் ஆகியவற்றை மொத்தமாக இறக்கி வைத்து, சென்னையில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடைகளுக்கு வினியோகம் செய்து வந்தார்.

இதே குடோனில் பெயிண்டுக்கு பயன்படுத்தும் டர்பன் தயாரிக்கும் மூலப்பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு குடோனை பூட்டிவிட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந்தநிலையில் இரவு 11 மணிக்கு மேல் திடீரென பெயிண்ட் குடோனின் பின்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் குடோன் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம், ஐகோர்ட்டு, வண்ணாரப்பேட்டை, எஸ்பிளனேடு, திருவொற்றியூர் ஆகிய 7 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குடோனில் எரிந்த தீ மீது தண்ணீர் மற்றும் ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பெயிண்ட் மற்றும் தின்னர் என்பதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள், பெயிண்ட் குடோனில் எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர்.

எனினும் தீ விபத்தில் குடோனில் இருந்த பெயிண்ட், தின்னர், வார்னிஷ் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story