திருத்தணி முருகன் கோவில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்


திருத்தணி முருகன் கோவில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2021 11:33 AM IST (Updated: 8 Oct 2021 11:33 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி முருகன் கோவில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலுக்கு தூய்மை பணிக்கு ஒப்பந்த முறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திராவை சேர்ந்த பாஸ்கர் நாயுடு என்பவர் தூய்மை பணி மற்றும் தங்கும் விடுதிகளில் பராமரிப்பு போன்ற பணிகளில் ஊழியர்களை ஏற்பாடு செய்துள்ளார். 

இந்த ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் தரவில்லை என்று ஊழியர்கள் குற்றம் சாட்டினர். கோவிலில் மொத்தம் 132 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தங்களுக்கு சம்பளம் சரிவர தரப்படவில்லை என்றும் கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்காமல் கஷ்டப்படுவதாக ஒப்பந்த பணியாளர்கள் ஒன்றிணைந்து முருகன் கோவில் மலை அடிவாரத்திலுள்ள நுழைவு வாயில் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் திருத்தணி போலீஸ் துறை உயர் அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் கோவில் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கோவில் நிர்வாக அதிகாரிகளை போலீசார் அழைத்தனர். கோவிலை சேர்ந்த அதிகாரிகளும் அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஆனால் அதிலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் நீங்கள் அனைவரும் கோவில் அலுவலகத்திற்கு வாருங்கள் பேசிகொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் கூறிய பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story