திண்டுக்கல்-திருச்சி பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
கொரோனாவால் 1½ ஆண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்ட திண்டுக்கல் திருச்சி பயணிகள் ரெயில் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-திருச்சி ரெயில்
தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரெயில், பஸ்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் ரெயில், பஸ் சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால் பயணிகள் ரெயில்கள் மட்டும் கடந்த 1½ ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்தது.
மேலும் தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து விட்டதால் பயணிகள் ரெயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு நேற்று மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது.
பயணிகள் மகிழ்ச்சி
இதையடுத்து திண்டுக்கல்லில் இருந்து காலை 6.15 மணிக்கு திருச்சிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் கடந்த 1½ ஆண்டுக்கு பின்பு திண்டுக்கல்-திருச்சி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் ரெயில் சேவை குறித்து பொதுமக்களுக்கு தெரியாததால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே சென்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பயணிகள் ரெயில் இயக்கப்படாததால், கூடுதல் கட்டணத்துடன் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டியது இருந்தது. மேலும் சில நேரம் டிக்கெட் கிடைக்காத நிலையும் ஏற்பட்டது. தற்போது திண்டுக்கல்-திருச்சி இடையே மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது மகிழ்ச்சிஅளிக்கிறது. இதேபோல் பழனி-திருச்செந்தூர், திண்டுக்கல்-மதுரை பயணிகள் ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும், என்றனர்.
திண்டுக்கல்-திருச்சி பயணிகள் ரெயில் தாமரைப்பாடி, வடமதுரை, அய்யலூர், கல்பட்டிசத்திரம், வையம்பட்டி, செட்டியபட்டி, மணப்பாறை, குளத்தூர், பூங்குடி ஆகிய ஊர்களில் நின்று செல்கிறது. மேலும் திருச்சிக்கு காலை 8.30 மணிக்கு ரெயில் சென்றடைகிறது. பின்னர் திருச்சியில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தடைகிறது.
Related Tags :
Next Story